தர்மபுரி: தர்மபுரி மாவட்ட தேமுதிக சார்பில் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து இன்று (மார்ச் 30) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய மற்றும் மாநில அரசைக் கண்டித்தும், விலை ஏற்றத்திற்கு தீர்வு காண வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்திற்கு வரும்பொழுது தர்மபுரி நான்கு ரோடு சந்திப்பில் இருந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் வகையில் மாட்டு வண்டியில் கேஸ் சிலிண்டா், ஸ்கூட்டரை வைத்துக்கொண்டு ஊர்வலமாக சென்று பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது, பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டா் விலை உயர்வைக் கண்டித்து மத்திய, மாநில அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழில் பேசினால், முழக்கங்களை எழுப்பினால் பிரதமர் மோடிக்கு தெரியாது எனக் கூறி, விஜய பிரபாகரன் ஹிந்தியில் முழக்கமிட்டார். அவரைப் பின்தொடர்ந்து தேமுதிக தொண்டர்களும் ஹிந்தியில் முழக்கமிட்டனர்.
மேலும் எல்லா பிரச்சினைகள் குறித்தும், ஊழல்கள் குறித்தும் புள்ளிவிவரம் கொடுக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஏன் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை எனச் சாடினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: சென்னை மண்டலக் குழுத் தலைவர் தேர்தல்: 14 திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு, ஒரு மண்டலத்தில் தேர்தல்