தர்மபுரி: பாலக்கோடு அருகே கும்மனூர் ஊராட்சியில் இருளர் இன மக்கள் வசித்துவருகின்றனா். இவர்கள் காட்டுப்பகுதியின் அருகே நெகிழிப் போர்வையால் சிறிய குடில் அமைத்து வசித்துவந்தனா்.
கடந்த 40 ஆண்டுகளாகத் தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா, புதிய குடும்ப அட்டை வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கைவிடுத்து-வந்தனா். ஆனால், இவா்களது கோரிக்கை செவிசாய்க்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. தற்போது இருளர் இன மக்களின் கோரிக்கை மனு மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் திவ்யதா்ஷினி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து 52 இருளா் இன மக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள், 12 நபர்களுக்குப் புதிய மின்னணு குடும்ப அட்டையுடன் தலா ரூ.4000 கரோனா நிவாரண நிதி, 14 வகையான மளிகைப்பொருள்கள், ஐவருக்கு இருளர் இன சாதிச்சான்றிதழ்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி பயனாளிகள் இருக்கும் இடத்திற்கே நேரடியாகச் சென்று வழங்கினார்.
கிடப்பில் போடப்பட்ட நெடுநாள் கோரிக்கையை நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியரின் செயலைப் பலரும் பாராட்டிவருகின்றனர்.
இதையும் படிங்க : வேடமணிந்து கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய தெருக்கூத்து கலைஞர்கள்