தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த அச்சல்வாடி பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவரது மகள் அரூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த மாதம் 24 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்று வருகிறேன் என்று கூறிச் சென்ற சிறுமி வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அப்பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர்.
இதனையடுத்து கடந்த 24ஆம் தேதி அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் பூவரசன் (19) என்பவர் தான் தன் மகளை கடத்திச் சென்றுள்ளார் என்று கூறி காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்துள்ளனர்.
மகள் காணமல்போய் இன்றுடன் 18 நாட்கள் ஆகியும் இதுவரை எந்த ஒரு தகவலும் கிடைக்காததாலும், காவல்துறையினர் தன் மகளை தேடும் பணியில் மெத்தனம் காட்டி வருகின்றனர் என்று கூறி, அரூர் காவல் நிலையம் முன்பு மாணவியின் பெற்றோர், உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.