தருமபுரி மாவட்டம் கடத்தூரைச் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன், முகேஷ் பாலாஜி, சூரிய பிரசாத், சஞ்சீவ்குமார் உள்ளிட்ட இளைஞர்கள் சிறுவயது முதலே வாலிபால் விளையாடுவதில் ஆர்வம் கொண்டவர்கள். தாங்கள் வாழும் கிராமங்களில் தினந்தோறும் வாலிபால் விளையாடி வந்துள்ளனர்.
பள்ளிகளில் தொடர்ந்து வாலிபால் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை வென்றிருக்கின்றனர். பின்னர், கிராமப்புற மாணவர்களின் விளையாட்டு மேம்பாட்டிற்காக தொடங்கப்பட்ட அமைப்பில் கலந்துகொண்டு போட்டிகளில் பங்கேற்று வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் வாலிபால் போட்டியில் பங்கேற்று மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். தொடர்ந்து திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியிலும், புனேவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியிலும் பங்கேற்று சிறப்பாக விளையாடி நேபாளத்தில் நடைபெறவுள்ள உலக அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
உலக அளவிலான போட்டி நேபாளத்தில் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது. இப்போட்டிகளில் கலந்துகொள்வதற்கான பயணச்செலவிற்கு பணம் இல்லாமல் இந்த இளைஞர்கள் தற்போது தவித்து வருகின்றனர்.
நேபாளத்திற்கு சென்று வருவதற்கு நபர் ஒன்றுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவாகும். ஆனால், இந்தத்தொகையை அவர்களது பெற்றோர்களால் செலவழிக்க முடியாத சூழல் உள்ளதால், இவர்கள் நேபாளத்தில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு அல்லது விளையாட்டின் மீது ஆர்வம் உள்ளவர்கள் தங்களுக்கு உதவினால் நிச்சயம் வென்று வருவோம் என்று நம்பிக்கையுடன் வாலிபால் வீரர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: எதிர்க்கட்சிகளிடம் பாராட்டுகளை எதிர்பார்க்கக் கூடாது: துரைமுருகன் பேச்சு