தர்மபுரி: கேரளா மாநிலத்தில் தமிழ்நாட்டு பெண் உள்பட இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு புதைக்கப்பட்டனர். இதில் தருமபுரி மாவட்டம் எர்ரபட்டியைச் சேர்ந்த பத்மா என்ற பெண் நரபலி கொடுக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. பத்மாவின் உடலை அடையாளம் காண, பத்மாவின் மகன்களான சேட்டு, செல்வராசு, பத்மாவின் தங்கை பழனியம்மாள், உறவினர்கள் முத்து, தட்சினாமூர்த்தி, ராமு, முனியப்பன் மற்றும் காசி உள்ளிட்ட உறவினர்கள் கேரளாவிற்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் நரபலி கொடுக்கப்பட்டதில் தோண்டி எடுக்கப்படும் உடல் அழுகிய நிலையில் இருப்பதால், உயிரிழந்தது பத்மாதானா என அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளது. இதனால் டிஎன்ஏ சோதனை செய்து உடலை கண்டுபிடித்து வழங்குவதாக கேரள காவல்துறை தெரிவித்துள்ளது. இதற்காக பத்மாவின் குடும்பத்தினரிடம் டிஎன்ஏ சோதனை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், பத்மாவின் உடலை இதுவரை டிஎன்ஏ சோதனை செய்யவில்லை. அதேநேரம் இந்த சோதனை முடிந்தால் உடலை வழங்க 19 நாட்களுக்கு மேலாகும் என கேரள காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பத்மாவின் குடும்பத்தினர் கேரளா மாநிலம் பத்தினம்திட்டா பகுதியில் தங்கியிருந்து வருவதாகவும், தனது தாயின் உடலை மீட்டுத் தர தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் எனவும் அவரது மகன் சேட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: CANNIBALISM : அதிர்ச்சி அளிக்கும் நரபலி குறித்த குற்ற ஆவண புள்ளி விவரங்கள்...