கரோனா வைரஸ் காரணமாக தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் வரை கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாகத் திகழ்ந்த தருமபுரியில் திடீரென ஐந்து பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட நபர்கள், சேலம் அரசு மருத்துவமனையிலும், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியிலும் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்தனர். இந்நிலையில் ஏற்கெனவே இப்பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட எலவடை பகுதியைச் சேர்ந்த இருவரும், தென்கரை கோட்டைப் பகுதியைச் சேர்ந்த இருவரும் என மொத்தம் நான்கு பேர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினர்.
இதனையடுத்து தற்போது மொரப்பூர் பகுதியைச் சேர்ந்த கரோனா உறுதிசெய்யபட்ட பெண் காவலரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
இதன் மூலம் தருமபுரி மாவட்டத்தில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் வீடு திரும்பியதால், தருமபுரி மாவட்டம், மீண்டும் கரோனா வைரஸ் தொற்று இல்லாத மாவட்டமாக மாற்றமடைந்துள்ளது.
இதையும் படிங்க:கைதிகளின் பரோல் காலத்தை நீட்டிக்கும் மனு முடித்து வைப்பு