தருமபுரி: தருமபுரி அடுத்த பாரதிபுரம் பகுதியில், கடந்த நவம்பர் 4ஆம் தேதி இரவு சிவராம கிருஷ்ணன் என்பவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, சுமார் 58 சவரன் தங்க நகைகள் திருடுபோனது. அதனைத் தொடர்ந்து, கடந்த 18ஆம் தேதி அதியமான்கோட்டையை அடுத்த எர்ரப்பட்டி பகுதியில், பொதுப்பணித்துறை காலனியில் உள்ள அன்பழகன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 12 சவரன் தங்க நகைகளும் திருடுபோனது.
மேலும், சேலம் மாவட்டம் சூரமங்கலம் ஜீவா நகரில் 14 சவரன் தங்க நகைகளும் என மொத்தம் 84.250 சவரன் தங்க நகைகளும் திருடுபோனது. இதனை அடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ரங்கசாமி தலைமையில் தனிப்படை அமைத்து, காவல்துறையினர் கொள்ளையடித்த நபரை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
இந்த தனிப்படை குழுவினர் தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த புட்சையா என்பவரது மகன் ராயப்பாடி வெங்கையா என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடமிருந்த சொகுசு காரில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த சுமார் 32 லட்சம் மதிப்பிலான 80 சவரன் தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கார் மற்றும் இருசக்கர வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. மேலும், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ராயப்பாடி வெங்கையா மீது ஆந்திரா, தெலங்கானா, வேலூர், சேலம், தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் கொலை, கொள்ளையில் ஈடுபட்டதாக பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நபர் ஆந்திரா, தெலங்கானா, வேலூர், சேலம், தருமபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையில் இருந்து இலங்கை செல்ல முயன்ற வங்கதேச இளைஞர் கைது!