தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உள் விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான முதல் ஜூடோ போட்டிகளைத் தருமபுரி மக்களவை உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் தொடங்கிவைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் செந்தில்குமார், "இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அரசுப் பள்ளிகளில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவருகிறது.
வட மாநிலங்களில் தனியார் பள்ளிகளிலேயே விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்த வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு தங்கள் விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு, கல்வித் துறை, விளையாட்டுத் துறை சிறப்பாகச் செயல்பட்டு இந்தியாவிலேயே முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிப்பிற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை விளையாட்டிற்கும் அளிக்க வேண்டும். அப்போதுதான் உடல் நலம், மனநலம் வலுவடையும். தற்போதைய சூழலில் மாணவர்கள் அதிகளவில் செல்போன்களைப் பயன்படுத்திவருகின்றனர். இதைத் தவிர்த்து விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: ட்ரம்ப்பின் வருகைக்காக காத்திருக்கும் தாஜ்மஹால்... பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு