தமிழ்நாடு முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற பரப்புரைப் பயணம் நடைபெற்றுவருகிறது. அந்த வகையில், தருமபுரி மாவட்டத்திலும் கடந்த இரண்டு நாள்களாக அரூர், தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் பல்வேறு இடங்களில் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் இன்று, வெள்ளக்கல், உழவர் சந்தை, இண்டூர், அன்னசாகரம், ஆட்டுக்காரன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பரப்புரைப் பயணம் நடைபெற்றது. இதில், தருமபுரி எம்பி செந்தில்குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எம்பி செந்தில்குமார், "தருமபுரி மாவட்டத்தில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற திமுக பரப்புரைப் பயணத்திற்குப் பொதுமக்களிடையே பெரும் எழுச்சி மிகு வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
நேற்றும், இன்றும் அரூர், தருமபுரி தொகுதிகளில் திமுக அமோக வெற்றிபெற்றதாக உணர்கிறோம். தருமபுரி அடுத்த தொப்பூர் கணவாய் பகுதியில் நேற்று நடைபெற்ற விபத்தால் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பதற்கு சாலை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. ஒசூர் முதல் சேலம் வரை ஆறு வழிச்சாலை ராயக்கோட்டை, பாலக்கோடு, தருமபுரி, அதியமான்கோட்டை வழியாக விரிவுபடுத்தப்பட உள்ளது. ஆனால் அந்தச் சாலைப் பணி மேற்கொள்ள இன்னும் மூன்று ஆண்டுகள் ஆகும்.
எனவே தொப்பூர் பகுதியில் அடிக்கடி நடைபெறுகின்ற விபத்தினைத் தடுப்பதற்குத் தற்காலிகமாகத் தீர்வு காணப்பட வேண்டும் எனத் தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்திவருகிறோம். நேற்று இந்த விபத்து நடைபெற்ற பிறகு மாவட்ட நிர்வாகம் மூலமாக தற்காலிகமாக விபத்து நடக்கின்ற பகுதிகளில் சாலையை விரிவாக்கம் செய்ய மத்திய அரசுக்கு நிதி ஒதுக்க கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.