தர்மபுரி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் குமார், பொதுவாக புதுமையான விஷயங்களை மேற்கொண்டு மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். மேலும், பலருக்கு சமூக வலைதளங்கள் மூலமாக நிதி திரட்டி மருத்துவம், கல்வி சார்ந்த உதவிகளையும் அவர் தொடர்ந்து செய்து வந்துள்ளார்.
வைரலாகும் பேஸ்புக் பதிவுகள்
முன்னதாக, மாநிலம் கடந்து சென்று ஏழைகளுக்கு கல்வி உதவித்தொகை அளித்து பலரது பாராட்டுகளையும் இவர் பெற்றுள்ளார். இந்நிலையில், சமீபகாலமாக செந்தில் குமாரின் பேஸ்புக் பதிவுகள் வைரலாகி வருகின்றன.
சித்த மருத்துவம் குறித்து சர்ச்சைக் கருத்து
அந்த வகையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அவர் சித்த மருத்துவம் குறித்தும், ஆவிப் பிடித்தல் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்ட நிலையில், பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவரைக் கண்டித்தும் கருத்து தெரிவித்து வந்தனர்.
கார்ட்டூன் பதிவிட்டு அடுத்த சர்ச்சை
இந்நிலையில் இன்று (மே.20) தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தனது கார்ட்டூன் படத்தை செந்தில் குமார் பதிவிட்டார். இதற்கு சில நெட்டிசன்கள் லைக்ஸ் இட்டு அவரை மகிழ்வித்து வரும் நிலையில், பலர் அர்ச்சனை செய்தும் சாடியும் கடுமையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த சில நாள்களாக தர்மபுரி மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகமாகப் பரவி வரும் சூழ்நிலையில், அம்மாவட்டத்தைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மக்கள் பணி எதுவும் செய்யவில்லை என பொதுமக்கள் ஏற்கனவே குற்றம் சாட்டி வருகின்றனர்.
நொந்துகொள்ளும் நலன் விரும்பிகள்...
எனினும் உதவி கேட்டு அவரைத் தொடர்பு கொள்ளும் பொதுமக்களுக்குத் தேவையான படுக்கை வசதி, ஆக்சிஜன் சிலிண்டர் வசதி போன்றவற்றை அவரது உதவியாளர்கள் மூலம் 24 மணி நேரமும் செந்தில் குமார் செய்து வருவதாக ஒருபுறம் மக்கள் பாராட்டு தெரிவித்தும் வருகின்றனர்.
இந்நிலையில், ”பிற அரசியல் தலைவர்கள்போல் தான் செய்யும் நல்ல செயல்களை வெளிப்படுத்தாமல், கடந்த சில நாள்களாக இதுபோன்ற விஷயங்களை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்குவது இவருக்கு வாடிக்கையாகி வருகிறது” என நொந்து கொள்கின்றனர் இவரது நலன் விரும்பிகள்!
இதையும் படிங்க: 'ஜக்கி வாசுதேவ் குறித்து இனி நோ கமெண்ட்ஸ்...’ பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்!