கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படாத நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியை கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையாக மாற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதனடிப்படையில், தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பொறியியல் கல்லூரியை இன்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தருமபுரி மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து 400 பேர் 28 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
28 நாள்களை கடந்த நிலையில், 25 பேர் நலமாக உள்ளனர். இதுமட்டுமின்றி 375 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
வெளிமாநிலங்களில் இருந்து தருமபுரிக்கு வந்துள்ள 8 ஆயிரத்து 575 பேர் தொடர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.
வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களை கண்காணிக்க 50 மொபைல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண்களுக்கு தனியாக 100 படுக்கை கொண்ட தனி வார்டுகள், பெண்களுக்காக 64 பேர் தங்கி சிகிச்சை பெறும் வகையில் தனித்தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலாக சிகிச்சை அளிக்க அரசு பொறியியல் கல்லூரியில் 700 படுக்கை வசதிகளுடன் சிகிச்சை பிரிவு தயார் நிலையில் உள்ளது.
தேவைப்பட்டால் 500 படுக்கை வசதியும் தனியார் சுயநிதி கல்லூரியில் ஆயிரம் படுக்கை வசதி கொண்ட சிறப்பு பிரிவு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் தானாக முன்வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகாமையில் கரோனா தொற்று உள்ள நபர்கள் இருந்தால் 1077எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில் குமார் விளம்பரத்துக்காக, அத்தியாவசிய சிகிச்சை வசதிகள் இல்லை என குற்றம் சுமத்தி வருகிறார். இதில் அவர் அரசியல் செய்யக்கூடாது" என்றார்.
இதையும் படிங்க: பத்து மாதக் குழந்தை உள்பட எட்டு பேருக்கு கரோனா பாதிப்பு!