தருமபுரி: வருகிற தைப்பொங்கல் தினத்தன்று தமிழ்நாடு அரசு சார்பாக ரூ.1000 உடன் அரிசி மற்றும் வெள்ளைச் சர்க்கரை வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுப்பில் கரும்பை இணைக்கவில்லை என ஒருபுறம் கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் வெல்லம் வழங்கவில்லை என்றாலும் நாட்டுச் சர்க்கரையாவது வழங்கலாம் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து தருமபுரி கடத்தூரைச் சேர்ந்த வெல்லம் உற்பத்தியாளர் சுகுமார் கூறுகையில், “வெல்லம் வழங்குவதில் அரசுக்கு நடைமுறை சிக்கல் இருந்தால், உள்ளூரில் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் நாட்டுச் சர்க்கரையை கொள்முதல் செய்து கொடுத்திருந்தால் கூட, உள்ளூர் ஆலை உரிமையாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் பயன்பட்டிருக்கும். ஆனால், சர்க்கரை (வெள்ளைச்சர்க்கரை) வழங்குவதால் விவசாயிகளும், இதனை நம்பியுள்ள 2,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற முதல் ஆண்டு (2022 பொங்கல்), தமிழ்நாடு அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் வெல்லத்துடன் கூடிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. இதற்காக வெல்லம் ஒரு சில தமிழ்நாட்டு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டன. இதில் பல இடங்களில் வழங்கப்பட்ட வெல்லம் இலகியதாகவும், தரம் இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டை தவிர்ப்பதற்காக வெல்லத்தை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு முன்வரவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் உள்ளூர் வியாபாரிகளிடம் இருந்து வெல்லம் கொள்முதல் செய்து நியாய விலைக் கடை மூலம் விநியோகம் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருந்தவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே எஞ்சியுள்ளது.
இதையும் படிங்க: பொங்கல் பரிசுத்தொகுப்பில் செங்கரும்பு இல்லை - விவசாயிகள் வேதனை