சேலம் மாவட்டத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால்,
அண்டை மாவட்டம் தருமபுரி மாவட்ட எல்லையிலுள்ள தொப்பூர், உமியம்பட்டி பகுதியிலுள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகளில் மது வாங்குவதற்காக சேலத்தை சேர்ந்த மதுப்பிரியர்கள் அதிகளவில் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்றுள்ளனர்.
அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி வாகனங்களுக்கு அனுமதி மறுத்தனர். அதனையடுத்து வாகனங்களை சாலையின் ஓரத்திலேயே நிறுத்திவிட்டு சுமார் இரண்டு கிலோமீட்டர் நடந்தே சென்று அங்குள்ள மதுக்கடைக்கு சென்றனர்.
சமூக இடைவெளியின்றி மதுப்பிரியர்கள் கூட்டம்
இதனால், சேலத்தை சேர்ந்த மதுப்பிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் டாஸ்மாக் மதுபானக்கடையில் குவிந்தனர்.
அங்கு சமூக இடைவெளி என்பதை ஒருவர் கூட பின்பற்றவில்லை. மேலும், கடை மூடும் நேரத்திலும் மது கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற அச்சத்தில் மதுப்பிரியர்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு மது வாங்க முயன்றனர்.
அவர்களை காவல் துறையினர் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். இதனையடுத்து கடை அடைக்கப்பட்டது. சேலம்-தருமபுரி மாவட்ட எல்லைகளில் மதுப்பிரியர்கள் குவிந்ததால் நோய்த்தொற்று பல ஆயிரம் மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.