பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதையடுத்து கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மக்கள் ஊரடங்கு இன்று நாடெங்கும் கடைப்பிடிக்கப்பட்டது. தருமபுரியில் உள்ள சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு ஊரடங்குக்கு ஆதரவளித்தனர். சாலைகளும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.
இத்தருணத்தில், ஊரடங்கை கடைப்பிடிப்பதற்காக, முதலமைச்சர் பழனிசாமியின் கோரிக்கையை ஏற்காமல் அரூரை அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்ற இளைஞருக்கு இன்று திருமணம் நடைபெற்றது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜெயராமனுக்கு பிப்ரவரி மாதம் திருமண நாள் குறித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து இன்று காலை 7 மணி முதல் மக்கள் ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக ஜெயராமன்-விஷ்ணுபிரியா ஜோடிகளுக்கு காலை 6.30 மணிக்கு திருமணம் நடந்தேறியது.
திருமண நிகழ்வுகளில் கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக மக்கள் அதிகளவில் ஈடுபட வேண்டாம் என அரசு தெரிவித்த நிலையில், இந்தத் திருமண நிகழ்வில் எந்தவித பாதுகாப்பு நடவடிக்கைகளும் இன்றி 100க்கும் மேற்பட்ட உறவினர்கள் கலந்துகொண்டது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.