தர்மபுரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் அமைந்துள்ளன. நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் ஆழ்துளைக் கிணறு அமைத்து, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலமும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதில், நகராட்சியின் 33ஆவது வார்டு அன்னசாகரம் பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் நீண்ட தூரம் சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இருப்பினும் அரசு அலுவலர்கள் குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு காண முறையாக நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அன்னசாகரம் பகுதி மக்கள், காலி குடங்களுடன் வந்து, முறையாக குடிநீர் வழங்கக்கோரி, தர்மபுரி நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், சுழற்சி முறையில் தண்ணீர் கூடுதலாகத் திறந்து விடுவதாகவும், விரைவில் தண்ணீர் பற்றாக்குறைக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அன்னசாகரம் பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: நெய்வேலி சுரங்க நீரினை ஆதாரமாகக் கொண்ட குடிநீர்த் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா