தருமபுரி: வத்தல்மலை மலை கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலைவாழ் மக்களிடம் கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மலைக்கிராம மக்கள் வத்தல்மலை கிராமத்திற்கு பேருந்து வசதி வேண்டுமென்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்க வேண்டும் என தங்கள் கோரிக்கையை முதலமைச்சரிடம் தெரிவித்தனர்.
கரோனாவை ஓரளவு கட்டுப்படுத்தினோம்
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்," கரோனா நோய்த்தொற்று பாதிப்பில் கடந்த ஒன்றே முக்கால் வருடமாக சிக்கிக்கொண்டு பல பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டை பொறுத்தவரை முழுமையாக கட்டுப்படுத்தி விட்டோம் என்று சொல்லமாட்டேன், ஓரளவு கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம்.
தற்போது இது ஒரு மிகப்பெரிய சாதனையாக எல்லோராலும் பேசப்படுகிறது. ஒரு பக்கம் மருத்துவ நெருக்கடி, இன்னொரு பக்கம் நிதி நெருக்கடி என்ற இரண்டையும் ஒரே நேரத்தில் நாம் எதிர் கொண்டிருக்கிறோம்.
505-இல் 202 நிறைவேற்றம்
தேர்தல் நேரத்தில் வாக்குறுதியாக கருணாநிதி பிறந்த நாளில் நான்காயிரம் ரூபாய் வழங்குவோம் என்று சொல்லியிருந்தோம். ஆட்சிக்கு வந்த உடனேயே கருணாநிதி பிறந்த நாளுக்காக காத்திராமல் வந்தவுடனேயே ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் நான்காயிரம் ரூபாய் நிதி உதவியை வழங்கிய ஆட்சி கருணாநிதி ஆட்சி என்பது உங்களுக்கு தெரியும்.
தேர்தலுக்கு முன்பு எல்லா கட்சிகளும் தேர்தல்களத்தில் ஈடுபடும் போது நாங்கள் பதவிக்கு வந்தால் இதை செய்வோம், அதை செய்வோம் என்று சொல்வார்கள். அது மரபு ஆனால், திமுகவைப் பொறுத்த வரைக்கும் தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகளை சொல்லி இருந்தோம். 505 வாக்குறுதிகளில் நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறேன் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி முடித்திருக்கிறோம்.
அந்த 202 வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம், நிறைவேற்றுவதற்கான அரசாணையை தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். மீதமுள்ள வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி கொடுப்போம்.
புத்துணர்வு பெற்ற சுய உதவிக்குழு
மக்களின் தேவை அறிந்து செயல்படும் அரசாக திமுக அரசு உள்ளது. இங்கு மக்கள் சாலை வசதி கோரிக்கையை கேட்டிருக்கின்றனர். போக்குவரத்து வசதிகளை பற்றி குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார்கள். மகளிர் சுய உதவி குழுவை பற்றி கூட சில சகோதரிகள் என்னிடம் பேசி இருக்கிறார்கள். திமுக ஆட்சியில் இருந்தபோது, கருணாநிதி முதன்முதலில் சுய உதவி குழுவை தர்மபுரி மாவட்டத்தில் ஆரம்பித்தார் என்பது வரலாறு.
சுய உதவிக்குழு எதற்காக தொடங்கப்பட்டது என்றால் பெண்கள் யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் அவர்களுடைய சொந்த காலில் நிற்க வேண்டும், தன்மானம், சுயமரியாதையுடன் வாழ வேண்டும். யாரையும் எதிர்பார்க்காமல் அவர்கள் வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டது. சுய உதவிக்குழு மீண்டும் புத்துணர்வு அடைந்திருக்கிறது" எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், பேசிய தர்மபுரி எம்.பி. செந்தில்குமார், "முதலமைச்சர் ஸ்டாலின் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் ஆரம்பித்து தருமபுரி, அதியமான் கோட்டை, ஒகேனக்கல், வத்தல்மலை என 32 மணி நேரத்தில் 412 கிலோ மீட்டர் பயணம் செய்து மக்களின் நலன்சார்ந்து உழைக்கக்கூடிய முதலமைச்சராக உள்ளார். வத்தல் மலைக்கு வந்த முதல் முதலமைச்சர் ஸ்டாலின் ஆவார்.
பிற மாநில மக்களின் ஏக்கம்
மற்ற மாநிலங்களில் உள்ள மக்கள் எங்களுக்கு இது போன்று மக்கள் சேவை செய்யக்கூடிய முதலமைச்சர் வேண்டும் என்ற ஏக்கத்தில் உள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சரின் செயல்பாடு மீது எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தருமபுரி மாவட்டத்திற்கு வந்த முதலமைச்சரை பொதுமக்கள் முக மகிழ்ச்சியோடு சாலையில் இருபுறமும் இருந்து வரவேற்றனர்" என்றார்.
இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தருமபுரி எம்பி செந்தில்குமார், தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே. மணி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் - சபாநாயகர் அப்பாவு கடும் எதிர்ப்பு