தருமபுரி: பொம்மிடி பகுதியில் சமீப காலத்தில் தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொம்மிடியில் உள்ள 10 கடைகளில் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் மற்றொரு கடையில் சென்று ஐஸ்கிரீமை சுவைத்து உண்ணும் வீடியோ வெளியாகியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் மூன்று கடைகளில் பூட்டை உடைத்து 15 ஆயிரம் திருடி சென்ற நிலையில் நேற்று அதிகாலையில் பொம்மிடி நகரப் பகுதியில் அமைந்துள்ள ஐஸ்கிரீம் கடை, கணிணி மையம், மளிகைக் கடை, ஜவுளிக் கடை, மரப்பட்டறை,பேக்கரி, கண் கண்ணாடி கடை, சோபா கடை என பத்துக் கடைகளில், மர்ம நபர் பூட்டுகளை உடைத்து கல்லாவில் இருந்த பணத்தைத் திருடி சென்றுள்ளனர்.
நேற்று காலை கடைகளைத் திறக்க வந்த உரிமையாளர்கள் பூட்டு உடைக்கப்பட்டுத் திருடப்பட்டு இருப்பது கண்டறிந்து அதிர்ச்சி அடைந்து, பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதன்பின் திருடுபோன கடைகளில் கைரேகை நிபுணர்கள் கைரேகையை கோரிக்கும் பணி மேற்கொண்டனர்.
இந்த திருட்டு சம்பவம் நடந்தப் பின் அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் பரிசோதிக்கப்பட்டது. அதில், அக்கடைக்குள் திருட சென்ற திருடன் பணத்தை திருடிவிட்டு பின்னர் அங்கிருந்த பெட்டியில் இருந்து ஐஸ்கிரீம் எடுத்து வந்து சாவகாசமாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டுச் சென்றது தெரியவந்தது.
இவை யாவும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தன. இந்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் திருடனின் முகம் தெளிவாகப் பதிவாகியுள்ளதால் விரைவில் திருடனை பிடித்துவிட முடியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி.. தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு