கர்நாடகா, கேரள மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கர்நாடக அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து 40 ஆயிரம் கன அடி நீர், காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் இன்று (ஆகஸ்ட் 5) இரவு அல்லது நாளை (ஆகஸ்ட் 6) காலை தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்று (ஆகஸ்ட் 5) காலை ஒகேனக்கல்லுக்கு வரும் நீர் வரத்து 3,500 கனஅடியாக இருந்தது. நண்பகல் நீர்வரத்து ஆயிரம் கனஅடி உயர்ந்து 4,500 கன அடியாக உள்ளது.