கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் பெய்துவரும் கனமழையின் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் நிரம்பியுள்ளது.
இந்த இரு அணைகளிலிருந்து 60 ஆயிரம் கனஅடி நீரை அம்மாநில அரசு திறந்துவிட்டது. இதையடுத்து இங்கிருந்து வெளியேற்றப்படும் காவிரி நீரானது இன்று (செப். 21) காலை 7 மணி அளவில் தமிழ்நாடு எல்லை பிலிகுண்டுலு வந்தடைந்தது.
முன்னதாக, ஒகேனக்கல்லில் நீர்வரத்து 11 ஆயிரம் கனஅடியாக நேற்று (செப். 20) இருந்தது. இதைத்தொடர்ந்து இன்று 9 ஆயிரம் கனஅடி நீர் உயர்ந்து 20 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து உயர்ந்துள்ளது. மாலைக்குள் 40 ஆயிரம் கனஅடி வரை நீர்வரத்தானது உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல், ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தருமபுரி மாவட்ட நிர்வாகம் தண்டோரா மூலம் அறிவிப்பு செய்துள்ளது. ஒகேனக்கல்லில் நீர்வரத்து உயர்வு காரணமாக மேட்டூர் அணைக்குச் செல்லும் நீரின் அளவும் உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு எல்லைக்குள் வந்த கிருஷ்ணா நதி நீர்!