தர்மபுரி நகரில் புறநகர் மற்றும் நகர்ப் பேருந்து நிலையங்கள் அருகருகே செயல்பட்டு வருகின்றன. இந்தப் பேருந்து நிலையத்தை தர்மபுரி நகரப் பகுதியில் இருந்து சோகத்தூர் கிராம பகுதிக்கு மாற்ற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், பேருந்து நிலையம் மாற்றுவதற்கு பொது மக்களும் வணிகர்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பேருந்து நிலையம் இடமாற்றம் தொடர்பாக கருத்து தெரிவிக்க, தருமபுரி நகராட்சி சார்பில் இம்மாதம் 26ஆம் தேதிக்குள் பொது மக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து, மருத்துவமனைகள் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல தற்போது உள்ள பேருந்து நிலையம் பாதுகாப்பாகவும் வசதியாகவும் உள்ளது என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்தால் கிராமப்புறங்களில் இருந்து வரக்கூடிய பொதுமக்கள் இரண்டு பேருந்துகள் மாறி மருத்துவமனைக்குச் செல்லக்கூடிய நிலை ஏற்படும். எனவே, பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய வேண்டாம் என தர்மபுரி அனைத்து வணிகர் சங்கங்கள் சார்பில், நகரப்பகுதியில் முழு கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
உணவகங்கள், வணிக நிறுவனங்கள் என நகரப்பகுதியில் உள்ள 4 ஆயிரத்து 500 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சுமார் 40 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பேருந்து நிலைய இடமாற்றத்தைக் கண்டித்து, அனைத்து வணிகர் பேரமைப்பு சங்கத் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் இம்மாதம் 26ஆம் தேதி மனு அளிக்க உள்ளதாகவும் அங்குள்ள வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:
பிளாஸ்டிக் குப்பைக்கு வெள்ளி நாணயம் வழங்கிய பசுமை தாயகம் அமைப்பினர்..!