தருமபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில், அண்டை மாநில மக்கள், வாகனங்கள் நுழையும் பகுதியில் சோதனைச்சாவடி அமைத்து நோய்க் கண்காணிப்பு பணிகள், தூய்மைப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுவருவதாக மாவட்ட ஆட்சியர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகள், தொடக்கப்பள்ளிகளுக்கு இம்மாதம் 31ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும் பரிசல் பயணம் மேற்கொள்ளவும் தடைவிதித்தும் உத்தரவிட்டுள்ளார்.
தீர்த்த மலை, அதியமான் கோட்டை, காலபைரவர் ஆலயம், முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு வெளியூரிலிருந்து வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட அவர், மாவட்டத்திலுள்ள திரையரங்குகள், வணிக வளாகங்கள், மக்கள் அதிகம் கூடும் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களில் தூய்மைப் பணிகளைத் தீவிரமாக மேற்கொள்ளவும் பணிகளைக் கண்காணிக்கவும் ஊரக வளர்ச்சி, பேரூராட்சி, நகராட்சித் துறை தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை விடுமுறை நாள்களில் குழுவாக விளையாடாமல் கண்காணிக்கவும் வீட்டுக்குள் நுழைந்தவுடன் அவ்வப்போது கைகளை சோப்பு போட்டு சுத்தமாகக் கழுவி அதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு முயற்சிக்கு பொதுமக்கள் தங்களது முழு ஒத்துழைப்பை வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா எதிரொலி - கொடிவேரி தடுப்பணை அருவிக்குச் செல்ல தடை!