கரோனா வைரஸ் தொற்றுக் கட்டுப்படுத்தும் விதத்தில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் மருத்துவத் தேவைகளுக்காக ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை அம்மாவட்டத்தில் முதன்முறையாக தொடங்க்கப்பட்டுள்ளது.
இந்த வசதியை பயன்படுத்துவோர் மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 1077க்கு தொடர்பு கொண்டு, தங்களது முகவரி குறித்து விவரம் தெரிவித்தால் அவர்கள் இருக்கும் இடத்திற்கு இந்த ஆட்டோ ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்படும். தர்மபுரி நகர எல்லைக்குள் பத்து கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் செல்ல ஆட்டோ ஆம்புலன்ஸ் வாகனத்தை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு 6 ஆட்டோக்கள், நான்கு முனைச் சாலை சந்திப்பில் மூன்று ஆட்டோக்கள், ஒட்டப்பட்டி, நல்லம்பள்ளியில் தலா மூன்று ஆட்டோக்கள் என மொத்தம் 15 ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த ஆட்டோக்கள் மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்தக் கட்டணத்தை வாடகை பெற்றுக்கொண்டு நோயாளியை அழைத்துச் சென்று திரும்பி வீட்டில் சேர்க்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப, கிராமப்புறங்களிலும் விரிவுப்படுத்தப்பட உள்ளது.
இதையொட்டி தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் ஆலோசனையின் பேரில், மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஆட்டோ ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பாதுகாப்பு முகக்கவசங்களை வழங்கினார்.
இதையும் படிங்க: ஈடிவி பாரத் செய்தி எதிரொலி - உணவின்றி தவித்த பூம்பூம் மாட்டுக்காரர்களுக்கு கிடைத்த உதவி