தருமபுரி: மூன்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீட்டில் இன்று (பிப்ரவரி 18) காலை 8 மணி முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். இதில் ஜெயராமன் ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றிவருகிறார்.
அதேபோல் மதலைமுத்து மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றிவருகிறார். மேலும் ஆனந்தன் கள்ளக்குறிச்சி மாவட்ட திட்ட அலுவலரின் நேர்முக உதவியாளராகப் பணியாற்றிவருகிறார். இந்த மூன்று வட்டார வளர்ச்சி அலுவலர்களும் வரும் மே மாதத்தில் பணி நிறைவுபெற்று ஓய்வு பெறவுள்ளனர்.
ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமனுக்குச் சொந்தமான ஏ. பள்ளிப்பட்டி வீட்டிலும், மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மதலைமுத்துவுக்குச் சொந்தமான ஏமகுட்டியூர் வீட்டிலும், அதேபோல் திட்ட அலுவலரின் நேர்முக உதவியாளராகப் பணியாற்றும் ஆனந்தனுக்குச் சொந்தமான அரூர் குறிஞ்சி நகர் வீட்டிலும் இன்று (பிப்ரவரி 18) காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.
இதில் மதலைமுத்து பாப்பிரெட்டிபட்டி வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றியபோது நிதி ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்தது. அந்தப் புகாரின் அடிப்படையிலேயே தற்போது மதலை முத்துவின் வீட்டில் சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
மேலும் ஆனந்தன், தருமபுரி மாவட்டத்தில் பணியாற்றும் காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக அவர் இரண்டு முறை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தற்பொழுதும் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையிலேயே அவரை மாவட்டம் கடந்த பணிமாறுதலில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் ஜெயராமன் மீது எழுந்த புகாரின் அடிப்படையிலேயே தற்போது இந்த மூன்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். சோதனை நிறைவுபெற்ற பிறகு பணம், சொத்து உள்ளிட்ட ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படுகின்றனவா என்பது தெரியவரும்.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சரின் ஆடிட்டர் அலுவலகத்திலும் சோதனை