தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தடங்கம் மேம்பாலம் அருகில் கோவையிலிருந்து திருநள்ளாறு சென்று திரும்பிய தம்பதியினரின் கார் மீது லாரி மோதியது. இதில் சாலையின் நடுவே உள்ள இரும்பு தடுப்புகளை கார் உடைத்துக்கொண்டு மறுபுறம் உள்ள சாலைக்கு தூக்கி வீசப்பட்டது.
காரில் இரண்டு பெண்கள், ஒரு ஆண், இரண்டு குழந்தைகள் என ஐந்து பேர் பயணம் செய்துள்ளனர். லாரி மோதிய வேகத்தில் காரின் பின்புறம் நசுங்கியதால் அதில் சிக்கிக்கொண்ட பானுஸ்ரீ என்ற பெண்மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், காயமடைந்தவர்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு லாரி 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், தருமபுரி அருகே இன்று மேலும் ஒரு விபத்து நடந்துள்ளது .