அதிமுக கூட்டணியின் தருமபுரி மக்களவைத் தொகுதி வேட்பாளரும், பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் இன்று தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
,“எட்டு வழிச் சாலை திட்டம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை தரக்கூடிய தீர்ப்பாக பார்க்கப்படுகிறது. இதை பாமக முழு மனதுடன் வரவேற்கிறது.
அதிமுக கூட்டணியில் இருந்தாலும் எந்தவித கொள்கை மாறுபாடும் இல்லாமல் ஒரே கொள்கையின் அடிப்படையிலேயே இக்கூட்டணியில் இணைந்துள்ளோம். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யாமல் இருப்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்படும். இயற்கை வளங்களை அழித்து எந்த ஒரு வளர்ச்சி திட்டத்தையும் செயல்படுத்த பாமக அனுமதிக்காது.
சென்னையிலிருந்து வாணியம்பாடி - ஊத்தங்கரை - அரூர் - மஞ்சவாடி - அயோத்தியபட்டினம் வழியாக சேலத்திற்கு நான்கு வழி விரிவாக்கத் திட்டத்திற்கு மத்திய அரசு 521 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இந்த சாலை விரிவாக்கத் திட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இது பயன்பாட்டிற்கு வந்தால் சென்னையில் இருந்து சேலத்திற்கு நான்கு மணி நேரத்தில் பயணம் மேற்கொள்ள முடியும். ஆகவே, எட்டு வழி சாலைத் திட்டம் தேவை இல்லாத ஒன்று. இத்திட்டத்தை கைவிட வேண்டும் என தமிழ்நாடு அரசை பாமக தொடர்ந்து வலியுறுத்தும். விவசாயத்தை அழித்து எந்த ஒரு வளர்ச்சித் திட்டத்தையும் செயல்படுத்த தேவையில்லை. விவசாயம், சுற்றுச்சூழல் வளர்ச்சி ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். ஒன்றை அழித்து ஒன்றை உருவாக்க வேண்டியதில்லை.
மேலும், இத்தீர்ப்பு உங்களின் தேர்தல் பரப்புரையில் ஏதாவது பாதிப்பை உருவாக்குமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “தேர்தலுக்கும் இந்த தீர்ப்புக்கும் தொடர்பில்லை. தாம் சுற்றுச்சூழலுக்கும் விவசாயத்திற்கும் ஆற்றிய கடமைதான் இந்த தீர்ப்பு என்றும் அவர் பதிலளித்தார்.