தர்மபுரியில் ஒகேனக்கல் பகுதியில் இருந்து காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த கோரி தனது இரண்டாவது நாள் நடைபயணத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரி அருகில் இருந்து தொடங்கினார். அப்போது சோலைக்கொட்டாய் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்தினால் மட்டும் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சென்று வேலை செய்பவர்கள் இங்கு மீண்டும் திரும்புவார்கள்.
காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்தினால் மற்ற மாவட்ட மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சிலர் கூறுகின்றனர். இந்த மாவட்டத்திற்கு மொத்தம் 3 டிஎம்சி தண்ணீர் மட்டுமே தேவைப்படுகிறது. ஆனால் இதுவரை 180 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. மழைக்காலத்தில் உபரியாக வரும் தண்ணீரில் 3 டிஎம்சி மட்டுமே எடுக்கும் திட்டம் இது.
இதனால் எந்த மாவட்ட விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படாது. தற்போது நடைபெறும் இந்த நடைப்பயணம் அமைதியாக நடைபெற்று வருகிறது. அரசாங்கம் திட்டத்தை அறிவிக்க தாமதம் செய்தால் நிச்சயமாக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த தயங்க மாட்டோம். உடனடியாக இந்த திட்டத்தை அறிவித்து நடைமுறைப்படுத்தி மக்களை காப்பாற்றுவேண்டும்
அண்மை காலமாக இலவசங்கள் வேண்டும் என்றும் ஒரு தரப்பும் இலவசங்கள் வேண்டாம் என்று ஒரு தரப்பும் நாடு முழுவதும் கருத்து கூறி வருகின்றன. வளர்ச்சியை நோக்கி வழங்கும் இலவசங்கள் வேண்டும். வாக்குகளுக்காக அளிக்கும் இலவசங்கள் வேண்டாம்.
வளர்ச்சிக்கான இலவசங்கள் என்பது கல்வி, சுகாதாரம் விவசாயம் ஆகிவற்றிக்கான வழங்கப்படுவதாகும். ஆனால் அரசு வழங்கும் கிரைண்டர், மிக்ஸி, ஃபேன் போன்றவை ஓட்டுக்காக வழங்கும் இலவசங்களாகும். இதனால் எந்த வித வளர்ச்சியும் இருக்கப்போவதில்லை. இதனை பாட்டாளி மக்கள் கட்சி 10 ஆண்டுகளாக காலமாக கூறி வருகிறது.
இதனால் பாமக மீது விமர்சனங்கள் வைத்தார்கள். தற்போது அதே கருத்தைதான் அனைவரும் சொல்கிறார்கள். கல்விக்கு இலவசமாக சைக்கிள், லேப்டாப், கல்வி கட்டணம் என அனைத்தும் இலவசமாக வழங்க வேண்டும். சுகாதாரத்திற்கு இலவசமாக ஊட்டச்சத்து உணவு பொருள்கள், மருத்துவ சோதனை, சிகிச்சை உள்ளிட்ட அனைத்தும் வழங்க வேண்டும்.
விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம், தரமான விதைகள், உரம் காப்பீடு வழங்க வேண்டும்.தமிழ்நாட்டின் கடன் சுமை ரூ.11 லட்சத்து 68 ஆயிரம் கோடியாக உள்ளது. தமிழ்நாடு அரசின் நேரடி கடன் ரூ.6 லட்சத்து 43 ஆயிரம் கோடி. ஆண்டு ஒன்றுக்கு 97 ஆயிரம் கோடி வட்டி கட்டுகிறார்கள். ஒரு மாநிலம் ஆண்டு ஒன்றுக்கு 97 ஆயிரம் கோடி வட்டி கட்டும் நிலை திறமை இன்மையால் நிகழ்ந்துள்ளது.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அதிகமாக கடன் வாங்கியது தமிழ்நாடுதான். உத்தரப் பிரதேசத்தின் மொத்த கடன் 6 லட்சம் கோடி. வட்டியாக செலுத்தக்கூடிய 97 ஆயிரம் கோடி ரூபாயை ஒருமுறை தமிழ்நாட்டில்லுள்ள நீர் நிலைகள் திட்டத்தை செயல்படுத்தினால் தமிழ்நாடு அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு நீர்பாசன தேவைகளில் தன் நிறைவு பெறும்” என்றார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ளது... மணிசங்கர் அய்யர்