தருமபுரியில் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், ‘தமிழ்நாட்டில் மருத்துவம், வேளாண்மை உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்துவரும் தமிழக அரசைப் பாராட்டி மத்திய அரசு பல விருதுகளை வழங்கிவருகிறது. இந்திய அளவில் பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டு மாணவர்கள்தான் அதிக அளவில் உயர்கல்வி படிக்கின்றனர்’ என்றார்.
மேலும், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அரசு வெற்றி பெற்றதற்கு காரணம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, அதற்கு முந்தைய தேர்தலில் தான் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றியதே ஆகும் என்ற அமைச்சர், திமுக தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாத கட்சி என்றும் சாடினார். மேலும், அக்கட்சியினர் அனைவருக்கும் இரண்டு ஏக்கர் நிலம் வழங்கப்படும் எனவும் தேர்தல் வாக்குறுதியாக அளித்தனர். ஆனால் யாருக்கு அவர்கள் நிலம் வழங்கினார்கள் என அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
மக்களவைத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்தே திமுக வெற்றிபெற்றது. ஆனால், அதன்பின் நடைபெற்ற இரண்டு சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றும் ஒரே கட்சி அதிமுகதான் என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘தியாகிகளின் பென்ஷன் உயர்வு ஏப்ரல் மாதத்திலிருந்து வழங்கப்படும்’ - நாராயணசாமி