தருமபுரி: தருமபுரியில் அதிமுக சார்பில் சொத்து வரி உயர்வைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம் தருமபுரி நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் கலந்துகொண்டு திமுக அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பி சொத்து வரி உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கோஷங்களை எழுப்பினார்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், “தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட காவல்துறையினர் அதிமுகவினர் மீது மட்டும் பொய் வழக்குகளைப் பதிவு செய்து வருவதாகவும். காரிமங்கலத்தில் அதிமுக இளைஞர்களை காழ்ப்புணர்ச்சி கொண்டு தனிப்படை அமைத்துத் தேடும் அளவு அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள் என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
மாரண்டஅள்ளி பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த ஜெயராமன், மாரண்டஅள்ளி பேரூராட்சியில் சிறிய அளவில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். இந்தக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கின்றனர். அதற்கு ஜெயராமன் மாரண்டஅள்ளி பேரூராட்சியில் உள்ள அனைத்து கடைகளும் விடுங்கள் தானும் தனது கடையை எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். அதற்காகவே அடுத்தநாள் காலையில் காவல்துறை அவரது வீட்டைச் சோதனை செய்து வீட்டில் கஞ்சா எதுவும் இல்லை என்று கூறி விட்டுச் சென்று விட்டார்கள்.
காவல்துறை மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்: மாலை 6 மணிக்கு அவரை அழைத்துச் சென்று ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா கைப்பற்றியதாகக் கூறி பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்துள்ளனர். மக்களைப் பாதுகாக்கக் கூடிய காவல்துறையே கீழ்த்தரமாக நடந்து கொண்டு யாரைத் திருப்திப் படுத்துகிறது. ஜெயராமன் வீட்டில் சோதனை செய்த போலீசார் அவர்கள் மனசாட்சிப்படி நடந்து கொள்ள வேண்டும்.
பொய் வழக்குப் போடக் காரணமாக இருந்த காவல்துறையினர் அழிந்து போவார்கள் எனச் சாபமிட்டார். காவல்துறையினர் மாறவேண்டும், காவல்துறை ஏவல் துறையாக இருக்கக் கூடாது. என்றார். மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட விவசாய நீர்ப்பாசனத் திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது.
அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமென அமைச்சர் முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் ஆர்ப்பாட்டத்தில் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி .அரூர் சட்டப்பேரவை உறுப்பினர் சம்பத்குமார் .முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:போட்டி அரசாங்கம் நடத்துகிறார் ஆளுநர் - கி. வீரமணி