தருமபுரி மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கரோனா வைரஸ் தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஒகேனக்கல் உபரி நீரை தருமபுரி மாவட்ட விவசாயிகள் பயன்படுத்துவது குறித்த திட்டம் ஆய்வில் உள்ளது என்றும் உயரம் அதிகமாக இருப்பதால் ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார். கோயம்புத்தூரில் இந்தி மூன்றாவது பாடமாக விண்ணப்பத்தில் இடம் பெற்றுள்ளது குறித்த என்ற கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், போலி விண்ணப்பத்தை வெளியிட்டு அவதூறு பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விவசாயிகள் அதிக அளவு மலர் சாகுபடி செய்துள்ளதாகவும், விவசாயிகளுக்கு சரியான விலை கிடைப்பதற்காக சர்வதேச மலர் ஏலம் மையத்தை 20 கோடி மதிப்பில் கிருஷ்ணகிரியில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, இந்த மையம் தொடங்கப்பட்ட பிறகு விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்றார்.
திருச்சியை தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகரமாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், இது அவரவர் தனிப்பட்ட கருத்து அரசின் முடிவு அல்ல என்றார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை குறித்து அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அவருக்கு உயர்தர சிகிச்சை வழங்க வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு வலியுறுத்தியதாக தெரிவித்தார்.