தருமபுரி: இன்று (ஜனவரி 11) தமிழ்நாடு தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் கருப்பையா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். மனுவில், ”தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் 2019-2020ஆம் கல்வி ஆண்டில் கூடுதல் பொறுப்பு முதல்வரும், தற்போதைய கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியருமான பாக்கியமணி மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
கல்லூரியில் பல தலித் பேராசிரியர்களுக்குத் தொடர்ச்சியாக மெமோ கொடுத்து பணி செய்யவிடாமல் வன்கொடுமை செய்துவருகிறார். தலித் ஆசிரியர் என்ற காரணத்தினால் நியாயமாக செலவுசெய்த நிதியைக் கல்லூரி விளையாட்டு நிதியிலிருந்து எடுத்து வழங்காமல் இவருடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
தருமபுரி அரசு கலைக் கல்லூரி புள்ளியியல் துறைத் தலைவர் முருகன் இறப்பிற்கு நீதி விசாரணை வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டனர். மேலும், தருமபுரி மாவட்டத்திலுள்ள 9004 ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்டுத்தரக் கோரியும் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு: ஆன்லைன் பதிவுமுறைக்கு வீரர்கள் கடும் எதிர்ப்பு