தருமபுரி: திப்பம்பட்டி அருகே உள்ள வன்னியக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் சௌந்தர் (45). இவருக்குச் சொந்தமான 27 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலம் தொடர்பாக அவருடைய குடும்பத்தாருடன் பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் இவரது உறவினரான தருமபுரி நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, அவரது கணவர் மாது மற்றும் அவரது மருமகன் முருகன் ஆகியோரிடம் உதவி கேட்டுள்ளார்.
அதற்கு அவர்கள் அந்த நிலத்தை முருகன் பெயரில் கிரயம் செய்து கொடுக்கும்படியும், தங்களுக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி பிரச்னையை முடித்து விடுவதாகவும், முடிந்ததும் மீண்டும் கிரயம் செய்து கொடுத்து விடுவதாக கூறியுள்ளனர். அதன் அடிப்படையில் சௌந்தருக்குச் சொந்தமான நிலத்தை முருகன் பெயருக்கு மாற்றி எழுதிக் கொடுத்துள்ளார்.
இதன் பின்னர் பிரச்னை தீர்ந்ததும் நிலத்தைத் திருப்பிக் கேட்டுள்ளார் சௌந்தர். ஆனால் முருகன் இந்த பிரச்னையை முடிக்க நிறையச் செலவாகி விட்டதால் ரூபாய் 23 லட்சம் தரவேண்டும் என்றும் அப்படித் தரவில்லை எனில் அந்த நிலத்தைத் திரும்பி கிரயம் செய்து கொடுக்க முடியாது என மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் வேறு வழி தெரியாத சௌந்தர் இரு தவணையாக ரூபாய் 23 லட்சம் கொடுத்த பின்பு தனது பெயருக்குக் கிரயம் செய்து கொடுத்துள்ளனர். தற்போது தனது உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் தனது பணத்தை முருகனிடம் சௌந்தர் கேட்டுள்ளார்.
அதற்கு நகர மன்ற தலைவி லட்சுமி மற்றும் திமுக நகரச் செயலாளர் நாட்டான் மாது உள்ளிட்டோர் அடியாள்களை வைத்து தனக்குக் கொலை மிரட்டல் விடுவதாகவும், தகாத வார்த்தைகளால் பேசி மன உலைச்சலுக்கு ஆளாக்குவதாகவும் கூறி பாதிக்கப்பட்ட சௌந்தர் இன்று (ஆக. 28) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது மனைவி மற்றும் அவரது 2 குழந்தைகள் மேலும் உறவினர் ஒருவருடன் வந்து தன்னுடைய பணத்தைப் பெற்றுத் தரவேண்டி கோரிக்கை வைத்துள்ளார்.
அதேசமயம் மண்ணெண்ணெய் கேனுடன் வந்த சௌந்தர் குடும்பத்தினர் மண்ணெண்ணெய்யை உடல் மீது ஊற்றித் தீவைத்து தற்கொலைக்கு முயன்றனர். உடனடியாக பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் அவர்களை மீட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திமுக நகர மன்ற தலைவி மற்றும் அவரது கணவர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.