தர்மபுரி மாவட்டம், இண்டூர் அடுத்த மல்லாபுரம் மைசூரான்கொட்டாய்ப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மதுவிலக்கு காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை செய்தனர். சோதனையில் எல்லப்பன் (50) என்பவர் பூமிக்கு அடியில் 200 லிட்டர் சாராய ஊறல் வைத்திருந்ததைக் கண்டறிந்தனர். இதையடுத்து அவற்றை காவல் துறையினர் அழித்தனர்.
இதையடுத்து, எல்லப்பனை கைது செய்த காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், கிராமப்பகுதியில் மதுபானம் கிடைக்காத விரக்தியில் சிலர் கிராமத்தை ஒட்டிய காட்டுப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருகின்றனர்.