தர்மபுரி மாவட்டம், அதகபாடி ஊராட்சியில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சின்ன வெங்காயம் பயிரிட்டுள்ளனர். கடந்த மாதம் முழுவதும் பெய்த மழையால் புதிய வகை நோய் தாக்குதல் ஏற்பட்டு, வெங்காய பயிரின் நுனிப்பகுதி காய்ந்து வருகிறது. இதன் காரணமாக விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்துள்ளனர்.
வெங்காயம், நடவு செய்தது முதல் 80 நாளில் அறுவடை செய்யலாம். தற்போது 80 நாட்கள் கடந்தும் நிலத்தில் வெங்காயத்திற்குப் பதிலாக வெறும் வேர்கள் மட்டுமே உள்ளன. ஒரு ஏக்கருக்கு வெங்காயம் சாகுபடி செய்ய ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு ஆகிறது என விவசாயிகள் கூறுகின்றனர்.
இந்த நோய் தாக்குதலால் அப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் பயிரிடப்பட்ட வெங்காயப் பயிர்கள் நாசமாகின. தற்போது விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் ஆடு, மாடுகளை விட்டு மேய்த்தும், வெங்காய பயிர்களை மாற்றுப் பயிருக்காக அப்படியே டிராக்டர் மூலம் உழவு செய்தும் வருகின்றனர்.

பயிர்களில் நோய் தாக்குதல் ஏற்பட்டு, அறுவடை செய்ய முடியாமல் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சின்ன வெங்காய திருட்டை கண்காணிக்க சிசிடிவி பொருத்திய வியாபாரிகள்