தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒட்டனூர் பகுதியில் இருந்து சேலம் மாவட்டம் கோட்டையூர் வழியாக ஏராளமானேர் கர்நாடகா மற்றும் ஈரோடு, சேலம் ஆகிய பகுதிகளுக்கு படகு மூலம் வேலைக்குச் சென்று வருகின்றனர். அதாவது ஒட்டனூரில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் மேட்டூர் அணையின் ஆழமான பகுதியை படகு மூலம் கடந்து சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று (ஜூலை 12) கோட்டையூரில் இருந்து ஒட்டனுர் நோக்கி வந்த படகில் பயணித்து வந்த லோக்கி (33) என்ற நபர் படகில் சென்று கொண்டிருந்து உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் விழுந்து மூழ்கி உள்ளார். இதனையடுத்து, உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு படகில் இருந்து தண்ணீல் தவறி விழுந்த நபரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 4 மணி நேர தேடலுக்குப் பின் தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கிய நபரை சடலமாக மீட்டெடுத்தனர். பின்னர் லோக்கியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது படகில் சென்ற நபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அப்பகுதி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த விசாரணையில், படகில் செல்லும் நபர்களுக்கு எந்த விதமான பாதுகாப்பு அம்சங்களும் இல்லாமல், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் பரிசல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது என்பது தெரிய வந்துள்ளது. ஒரு வேளை அந்த நபர் லைப் ஜாக்கெட் அணிந்திருந்தால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டிருக்கும் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இனிவரும் காலத்தில் தருமபுரி மாவட்ட நிர்வாகம், படகில் பயணம் செய்யும் நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பயணம் செய்யும் நபர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்க பரிசல் குத்தகைதாரர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.
மேலும், படகில் பயணித்த ஒருவர் தவறுதலாக நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் படகில் பயணம் செய்யும் மக்களிடையே பெரும் அச்சத்தையும், பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கரூர் இரட்டை கொலை வழக்கு: அண்ணன், தம்பிக்கு இரட்டை ஆயுள் தண்டனை!