தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற விவசாயி தான் முதன்முதலாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் எட்டு வழிச்சாலைக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இவருக்குப் பின்பாக பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் எட்டு வழிச்சாலை குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டது தவறு என்றும், கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விவசாயிகளிடமே திருப்பி அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியிருந்தது.
இத்தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ‘எட்டு வழிச்சாலை விவகாரத்தில் முதல் முதலாக வழக்கு தொடர்ந்தது நான் தான். ஆனால், பாமகவினர் தொடர்ந்து அவர்கள் வழக்கிட்டுத் தீர்ப்பு பெற்றதைப் போல ஆங்காங்கு தேர்தல் பரப்புரையில் கூறி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் பொய்யான பரப்புரையில் ஈடுபடுவது கண்டனத்துக்குரியது. எட்டு வழிச்சாலை நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அன்புமணி பெயரோ, அவரது வழக்கறிஞர் பெயரோ இடம்பெறவில்லை. இந்த வழக்கில் நான் தொடர்ந்த வழக்குக்காகத் தான் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது’ என்று தெரிவித்தார்.
வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் இதனால் பாதிக்கப்படும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களைத் தோற்கடிப்போம் என்ற வாசகம் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை இவர்கள் பொது மக்களிடம் தற்போது வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.