தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பொம்ம அள்ளி, உச்சம்பட்டியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சார்பில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை தமிழ்நாடு உயர் கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் திறந்துவைத்தார். தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு மருத்துவப் பெட்டகத்தை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பழகன், "தமிழ்நாடு முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து, திறந்துவைத்துள்ளார். இதில் ஒரு மருத்துவர், செவிலி, மருத்துவப் பணியாளர் என மூன்று பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டத்திற்கு 43 மினி கிளினிக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், எண்ணேகோல்புதூரிலிருந்து தும்பலஹள்ளி அணைக்கும், அடையாளம் அணைக்கட்டிலிருந்து தூல் செட்டி ஏரிக்கும் தண்ணீர் கொண்டுவரும் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு அரசு, அரசாணை பிறப்பித்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்தத் திட்டங்களில் பெரும்பாலான பகுதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருவதால் அங்குள்ள விவசாயிகள் இத்திட்டங்களைச் செயல்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒரு பெரிய திட்டத்தைக் கொண்டுவந்தாலும் அந்தத் திட்டத்திற்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றால் அதை நிறைவேற்ற முடியாது" எனத் தெரிவித்தார்