தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நாகமரை ஊராட்சியில் ஏமனூர், ஆத்துமேடு, சிங்கபுரம், ஆதிதிராவிடர் காலனி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் சுமார் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியை சேர்ந்த மக்கள் 25 ஆண்டுகளாக பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியாளர்களுக்கு பல மனுக்களை கொடுத்தும் இவர்களுக்கான பிரச்னை தொடர்வதாக கூறி வரும் 2021 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.
25 ஆண்டுகளாகத் திறக்கப்படாத துணை சுகாதார நிலையத்தை திறந்து மருத்துவர்களை நியமிக்க வேண்டும். கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு வீட்டுமனைப்பட்டா மற்றும் விவசாய நிலத்திற்கான பட்டா வழங்கவேண்டும். பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பசுமை வீடு வழங்க வேண்டும்.
கிராமத்திற்கு தார் சாலை, பேருந்து வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கால்நடை துணை மருத்துவ நிலையம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, இவற்றை நிறைவேற்ற வேண்டும், தவறினால் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கிராம மக்கள் ஒன்றிணைந்து வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:10ஆம் வகுப்பு ஆசிரியைக்கு கரோனா அறிகுறி: பெற்றோர்கள் அச்சம்!