தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளி தொட்ட பாவாளி கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன் வீரபத்திரன் (17). இவர், அமானி மல்லாபுரத்தில் இருந்து தனது தங்கையை ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, உப்பாரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த மர வியாபாரி சிக்குண்டன் (60) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் அதேபகுதியைச் சேர்ந்த பெருமாள் (59) என்பவரை பின்னால் அமர வைத்துக் கொண்டு அமானி மல்லாபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது, இரண்டு இருசக்கர வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதியது. இதில் பெருமாள் கையில் வைத்திருந்த கடப்பாரை சிறுவன் வீரபத்திரன் மார்பில் குத்தியது. இதனால் வீரபத்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த அவரது தங்கையை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மாரண்டஅள்ளி காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் குமார் உள்ளிட்ட காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், வீரபத்திரனின் உடலை மீட்ட காவல் துறையினர், உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிக்குண்டன், பெருமாள் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.