தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பேகாரஅள்ளியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கிவருகிறது. இந்தப் பள்ளியில் தனபால் என்பவரின் மகன் பழனிசாமி பன்னிரெண்டாம் வகுப்பு படித்துவருகிறார். தனபால் தனது விவசாய நிலத்திலுள்ள எலிகளை அழிக்க ரசாயனம் கலந்த எள்ளுருண்டையை தயார்செய்து அதை தனது இருசக்கர வாகனத்தில் வைத்துள்ளார்.
இருசக்கர வாகனத்தில் எள்ளுருண்டை இருந்ததைப் பார்த்த பழனிசாமி, தனது தந்தை தனக்காகத்தான் வாங்கி வைத்திருக்கிறார் என்று நினைத்து, அதனைப் பள்ளிக்கு எடுத்துச்சென்றுள்ளார். பின்னர் பழனிசாமி எள்ளுருண்டையை தானும் உட்கொண்டு தனது சக நண்பர்களுக்கும் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து ரசாயனம் கலந்த எள்ளுருண்டையை உட்கொண்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாகப் பள்ளி ஆசிரியர்கள் ஊர் மக்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர், ஊர்மக்கள் மாணவர்களை முதலுதவிச் சிகிச்சைக்காக ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று, பின்பு அங்கிருந்து தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
எள்ளுருண்டை சாப்பிட்ட பழனிசாமி உட்பட 13 மாணவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மருத்துவர்கள் குழு மாணவர்களைத் தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர்.
இதையும் படிங்க:ஆற்றில் வெடி, விஷம் கலந்து மீன் பிடித்தால் கடும் நடவடிக்கை