கடலூர்: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பயிற்சிகளை வழங்க திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர், மதுரை, ஸ்ரீரங்கம் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பயிற்சிப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பயிற்சி மையத்தில் சேருபவர்களுக்கு ஓராண்டு பயிற்சியில் ஆகமங்கள், கோயில்களில் பூஜைகள் எப்படி செய்யப்பட வேண்டும், மந்திரங்களை எப்படி ஓத வேண்டும் என்று பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சி பள்ளிகளில் ஆண்கள் மட்டுமே பயின்று வந்தனர்.
இந்நிலையில், தற்போது கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரம்யா, கிருஷ்ணவேனி மற்றும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சிதா ஆகிய மூவரும் அர்ச்சகர்களாக பயிற்சி பெற்று அதில் தேர்ச்சியும் அடைந்துள்ளனர். மேலும், அதற்கான சான்றிதழை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.
இது குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு ரம்யா அளித்த சிறப்பு பேட்டியில், ‘நான் கடலூர் மாவட்டம் திட்டக்குடி மேல் ஆதனூர் கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள். முதுநிலை கணிதம் (MSC MATHS) படித்துள்ளேன். எப்பொழுதும் கடவுள் மீது பக்தியில் இருக்கும் நான், கல்லூரியில் படிக்கும் பொழுது என்னுடன் படித்த கிருஷ்ணவேனி மூலம்தான் பயிற்சி வகுப்பு குறித்து கேள்விப்பட்டேன். உடனே என் வீட்டில் தெரிவித்தேன். அவர்களும் எந்த எதிர்ப்புமின்றி சம்மதம் தெரிவித்தனர்.
ஆண்களுக்கு இணையாக பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என்றதால், சாமி மீது இருந்த பற்றினால் நான் படித்து முடித்து விட்டேன். இந்த திட்டத்தை அறிவித்த தமிழக முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மூலம் சான்றிதழை பெற்றுக் கொண்டோம். அமைச்சருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
மேலும், எனது பெற்றோர்களின் ஒத்துழைப்பால் தான் என்னால் படிக்க முடிந்தது என்றும், எந்த பிரச்னை இருந்தால் பார்த்துக் கொள்வதாக எனக்கு முழு ஒத்துழைப்பு தந்தனர். முதல் பெண் அர்ச்சகர் என்று சொல்வதில் எனக்கு பெருமையாக இருப்பதாகவும், முதல் பெண் அர்ச்சகர் ஆவதற்கு அரசும் ஆதரவாக இருந்தது. மக்களும் ஆதரவாக இருந்து பெண்களும் கோயிலில் பூஜை செய்ய ஆதரவு அளிக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து கிருஷ்ணவேனி ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், ‘நான் இளநிலை கணிதம் (BSC MATHS) படித்துள்ளேன். ஸ்ரீரங்கத்தில் உள்ள வைணவப் பள்ளியில் ஓராண்டு பயிற்சி முடித்தேன். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் நான் பயிற்சியை முடித்துள்ளேன்.
இந்த திட்டத்தை அறிமுகப்படுத்திய தமிழக முதலமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சமுதாயம் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டு எங்களுக்கு நல் ஆதரவை தர வேண்டும் என கேட்டுக் கொள்வதாகவும், எங்கள் பகுதியில் உள்ள பெருமாள் ஆலயத்தில் பணி செய்ய தமிழக அரசிடம் கேட்டுள்ளதாக தெரிவித்தார்’.
மேலும், இது குறித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கனேசன் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:கோயம்பேடு - ஆவடி மெட்ரோ ரயில் திட்டம்..! தமிழக அரசிடம் திட்ட அறிக்கை.. எந்தெந்த இடங்களில் மெட்ரோ ரயில்கள்?