கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த கொல்லிருப்பு காலனி பகுதியைச் சேர்ந்தவர் முனியன். இவரது மகன் பிரகாஷ் (25). இவர் கடந்த 23ஆம் தேதி இரவு, அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களான கார்த்திக்(23), ராஜதுரை(25), சதிஷ்குமார்(23), சிவபாலன்(22) ஆகியோருடன் மது அருந்துவதற்காக நெய்வேலி 2ஆம் அனல்மின் நிலையம் அருகே உள்ள சாம்பல் ஏரிக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் பிரகாஷை ரத்த காயங்களுடன் சிகிச்சைக்காக அவரது நண்பர்களான கார்த்திக், சதிஷ்குமார், ராஜதுரை ஆகியோர் மந்தாரக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே பிரகாஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெய்வேலி தெர்மல் பகுதி காவல் துறையினர் பிரகாஷின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கார்த்திக், ராஜதுரை, சதிஷ்குமார் ஆகிய மூன்று பேரிடம் விசாரணை மேற்கொண்டதில், நான்கு பேரும் அமர்ந்து மது அருந்தியபோது அடையாளம் தெரியாத நபர்கள் அங்கு வந்ததாகவும், அவர்கள் பிரகாஷை சரமாரியாகத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாகவும் கூறினர். இதில் சந்தேகமடைந்த காவல் துறையினர் மூன்றுபேரிடமும் தனித்தனியாக விசாரித்தனர்.
இந்நிலையில் ஊ. மங்கலம் அருகே உள்ள புதுதெற்குவெள்ளூர் பகுதியைச் சேர்ந்த 31வயது மதிக்கதக்க கணவரை இழந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த 23ஆம் தேதி எனது உறவினர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் வடலூரில் இருந்து நெய்வேலி வழியாக சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்தேன். அப்போது, 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த கொல்லிருப்பு காலனியைச் சேர்ந்த கார்த்திக், சதிஷ்குமார், ராஜதுரை, பிரகாஷ், சிவபாலன் ஆகிய 5 பேரும் எங்களை வழிமறித்தனர்.
பின்னர் அவர்கள் என்னுடன் வந்தவரை மிரட்டி துரத்தி விட்டு, என்னை அருகில் உள்ள தோட்டத்துக்குள் தூக்கிச்சென்றனர். அங்கு 5 பேரும் மாறி, மாறி பாலியல் வன்புணர்வு செய்தனர். அதனை தொடர்ந்து அவர்கள், சாம்பல் ஏரி அருகே தூக்கி சென்று மீண்டும் அதே செயலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து என்னை மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு அழைத்து செல்வது தொடர்பாக அவர்கள் 5 பேருக்குமிடையே போட்டி ஏற்பட்டது. பின்னர் இது தகராறாக மாறியதில் கார்த்திக் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து பிரகாஷை தாக்கினர். இதனால் பதறிப்போன நான், அங்கிருந்து தப்பி ஓடி விட்டேன் என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து கார்த்திக் உள்ளிட்ட 3 பேரிடமும் காவல்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் பிரகாஷை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் மது அருந்தியபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை மிரட்டி துரத்திவிட்டு, அவருடன் வந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்தோம். பின்னர் அந்த பெண்ணை வீட்டில் கொண்டு விடுவது தொடர்பாக எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் நாங்கள் 4 பேரும் சேர்ந்து பிரகாஷை அடித்துக்கொலை செய்தோம். பின்னர் சிவபாலன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த கொலையை மறைப்பதற்காக, பிரகாஷை அடையாளம் தெரியாத நபர்கள் அடித்து கொலை செய்து விட்டதாக கூறி நாடகமாடினோம். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணே நேரில் வந்து புகார் கூறியதால் காவல்துறையில் சிக்கிக்கொண்டோம். இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:சிறுமியை சீரழித்து தப்பியோடிய முக்கிய குற்றவாளி கைது!