கடலூர் - புதுச்சேரி சாலையில் காட்டுப்பாளையம் அருகே உள்ளது சிவனார்புரம். தமிழக பகுதியான இந்த பகுதியில் சேகர் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் பட்டாசு தொழிற்சாலை இயங்கி வந்தது. இந்த தொழிற்சாலைக்கு உள்ளேயே பட்டாசு குடோனும் இருந்தது. இந்த நிலையில் மாசி மகம் கொண்டாடுவதற்காக பல்வேறு கோவில்களில் இருந்து பட்டாசு ஆர்டர்கள் வந்துள்ளன.
இந்த ஆர்டர்களை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். மேலும் குடோன் முழுவதும் பட்டாசு இருந்த நிலையில் நேற்று பிற்பகல் திடீரென பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கின. அப்போது பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தவர்கள் மற்றும் குடோன் அருகே இருந்தவர்கள் என அனைவரும் இந்த வெடி விபத்தில் சிக்கினார்.
குடோனும் இடிந்து தரைமட்டமானது. உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சென்று தீக்காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் பணியில் இருந்த 9 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் கடலூர் மற்றும் புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் மல்லிகா என்பவர் பலியானார்.
மேலும் 80 சதவீதத்திற்கு அதிகமான காயத்துடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 5 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் இந்த சம்பவம் குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வெடி விபத்தில் பிருந்தா தேவி (35) க/பெ இளங்கோவன், செவ்வந்தி (19) த/பெ செல்வம், அம்பிகா (18) த/பெ ராஜேந்திரன், லக்ஷ்மி (24) த/பெ செல்வம், மல்லிகா க/பெ பூபாலன் ( இறந்துவிட்டார் ), சுமதி (45) க/பெ அய்யனார் ஆகியோர் கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மேகலா(34), க/பெ மதன், சக்திதாசன் (24), த/பெ சங்கர், மலர் (25), க/பெ பாபு ஆகியோர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டாசு ஆலை கொட்டகையிலானது என்பதால், வெடி விபத்து ஏற்பட்ட உடன் தீ வேகமாக பரவியுள்ளது. மேலும் பட்டாசு உற்பத்தி செய்யும் இடத்திலேயே குடோனும் வைத்திருந்ததால் விபத்து பெரியளவில் ஏற்பட்டுள்ளது.
பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்ட உடன் பணியாற்றியவர்கள் காயங்களுடன் தப்பி வெளி வந்துவிட்டதாகவும், வயதானவர்களால் உடனடியாக வெளியே வர முடியாத சூழலில் கொட்டகையும் இடிந்து விழுந்ததால் அவர்கள் மேலும் காயமடைந்ததாக அங்கு பணியாற்றியவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் குறித்தும், ஆலையின் உரிமம், அரசின் விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்பட்டதா எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் திருநெல்வேலி மாவட்டம் அணைக்கரை அருகே தோட்டத்தில் வைத்து நடத்தி வந்த வாண வேடிக்கை தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் அங்கு பணியாற்றிய ஊழியர் உயிரிழந்தார். மேலும் விருதுநகர், சாத்தூர், சிவகாசி பகுதிகளில் அடிக்கடி பட்டாசு ஆலைகளில் விபத்துகள் ஏற்படுகின்றன. பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்படும் போது தீ வேகமாக பரவுவதாலும், வெடிகள் வெடித்துக் கொண்டிருக்கும் போது அருகில் சென்று அணைக்க முடியாத காரியம் என்பதாலும் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்படுகிறது.
பட்டாசு ஆலைகளை இயக்குவதற்கு அரசு வகுத்துள்ள வழிகாட்டுதல்கள் முறையாக கடைபிடிக்கப்படாததும், முறையான ஆய்வுகள் நடத்தப்படாததும் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைகின்றன. இதனால் பலர் உயிரிழந்திருப்பதுடன், மேலும் பலர் படுகாயம் அடைந்து வடுக்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் 9 மாத கர்ப்பிணி மற்றும் சிசு உயிரிழப்பு