கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் மருங்கூர் கீழக்கொல்லை சேர்ந்தவர் செந்தில்நாதன். கார் ஓட்டுநர், இவரது மனைவி தனலட்சுமி இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தையும் 4 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் நேற்று மதியம் (ஜன.26) மூன்று மணி முதல் இவர்களது ஆண் குழந்தையை காணவில்லை என்பதால் அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் ஊர்க்காரர்கள் பல இடங்களில் தேடி உள்ளனர். அதன் பின் எங்கு தேடியும் கிடைக்காததால், முத்தாண்டிக்குப்பம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இச்சம்பவம் பற்றி காடாம்புலியூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர், முத்தாண்டிக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அதில், அதே பகுதியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் சிறுவனை மாலை அழைத்து சென்றது தெரியவந்தது.
இந்நிலையில், இன்று காலை (ஜன.27) அதே பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் பலத்த காயத்துடன் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சிறுவன் கண்டெடுக்கப்பட்டார். இந்நிலையில், சிறுவனுக்கு பெண் பாலியல் தொல்லை அளித்து கொன்றது தெரியவந்தது.
இதையடுத்து அப்பெண்ணை கைது செய்து காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழனாக இருந்தும் தமிழ்த்தாயை மதிக்க மறுப்பவர்களை என்ன செய்வது ? - ராமதாஸ் வேதனை