கடலூர் மாவட்டத்திலுள்ள திருவந்திபுரம் தேவநாத சுவாமி ஆலயம் சின்ன திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஒவ்வொரு முகூர்த்த நாள்களில் நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறும்.
அறநிலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆலயத்தில் முறையாக மணமக்களின் குடும்பத்தினர் திருமணத்திற்கான அனுமதி வேண்டி விண்ணப்பித்த பிறகுதான் இங்கு திருமணம் என்பது நடத்தப்படும்.
அதற்காக அரசின் மூலம் பதிவுச் சான்றிதழ் வழங்கப்படும் நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஆலயங்களில் திருமணம் உள்ளிட்ட விழாக்கள் நடத்த தமிழ்நாடு அரசு கட்டுப்பாடு விதித்திருந்தது.
நேற்று (ஏப்ரல் 24) அனைத்து வழிபாட்டுத் தலங்களை மூட உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று (ஏப்ரல் 25) முகூர்த்த நாள் என்பதால் பல்வேறு குடும்பத்தினர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி ஆலயத்தில் திருமணம் நடத்துவதற்காக முன்பே திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் இன்று (ஏப்ரல் 25) கோயில் மூடப்பட்டதால் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் மூடப்பட்ட கோயிலின் எதிரே உள்ள சாலையில் தங்கள் முக்கிய உறவினருடன் திருமண விழா நடைபெற்றது. சுமார் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் காலையிலிருந்து நடைபெற்றுவருகின்றன.