கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாமகவை சேர்ந்த இரா.கோவிந்தசாமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது; 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் சிறப்பாக செயல்பட்ட உறுப்பினர்களில் கோவிந்தசாமியும் ஒருவர். இவரது சிறப்பான பணியை பார்த்துதான் பாமக தலைமை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தற்போது வாய்ப்பு வழங்கியுள்ளது.
மேலும் மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டு அதிமுக - பாஜக, கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் எங்களது கூட்டணியில் இணைந்துள்ளன.
நமது மாநிலத்தின் ஜீவாதார உரிமைகள் அனைத்தும் திமுக ஆட்சியில்தான் பறி கொடுக்கப்பட்டது. திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, நிலஅபகரிப்பு ஆகியவை அதிகமாக நடைபெற்றது. இதனை தடுத்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. எனவேதான் நல்லது காப்பாற்றப்பட வேண்டும், தீயவை அகற்றப்படவேண்டும் என்றால் மக்கள் அதிமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.