கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பொறியாளராக வேலைபார்க்கும் விஜயராஜ் என்பவரது இரண்டாவது மகள் ஓவியா. இவரது தாயார் கோகிலா. ஓவியாவிற்கு இரண்டாம் வகுப்பு படிக்கும்போதே கரும்பலகையைப் பார்த்து படிப்பதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஓவியாவின் ஆசிரியர் அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர்கள் ஓவியாவை மருத்துவரிடம் காண்பித்துள்ளனர்.
பரிசோதனையில் ஓவியாவுக்கு ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா (Retinitis pigmentosa) என்ற வகை பார்வை குறைபாடு ஏற்பட்டு உள்ளது தெரியவந்தது. இந்த குறைப்பாட்டுக்கு மருத்துவ சிகிச்சை இல்லை என தெரிவித்துள்ளனர்.
பின்னர் திருச்சியில் நிழல் கற்பித்தல் முறையில் (shadow teaching method- ஆடியோ, வீடியோக்களின் மூலம் குழந்தைகளின் கேட்கும், பேசும் திறனை அதிகரிப்பதற்கான பயிற்றுவிப்பு முறை) கல்வி கற்கலாம் என ஒருவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஓவியா இரண்டாம் வகுப்பு படிக்கும்போது அவரது பெற்றோர் அவரை திருச்சிக்கு அழைத்துச் சென்று நிழல் கற்பித்தல் முறையில் பயில பயிற்சி அளித்தனர். இங்கு இரண்டு ஆண்டுகளாக ஓவியா கல்வி பயின்றுவந்தார்.
இதனால் ஓவியாவுக்கு புதிய தன்னம்பிக்கை கிடைத்துள்ளது. ஆறாம் வகுப்பு படிக்கும்போது ஓவியாவிற்கு பார்வை முற்றிலும் பறிபோனது. இதையடுத்து அவரது பெற்றோர் என்ன செய்வதென தெரியாமல் தவித்த நேரத்தில் ஓவியாவின் தந்தை சென்னைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். அப்போது சங்கர் சுப்பையா என்பவர் லேப்டாப்பில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கல்வி பயிற்றுவிக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து சங்கர் சுப்பையாவின் மூலம் கணினி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கல்வி பயின்று வந்தார் ஓவியா. பின்னர் ஏழாம் வகுப்பு படிக்க ஓவியாவை நெய்வேலியில் உள்ள ஜவகர் சிபிஎஸ்இ பள்ளியில் சேர்த்தனர். அதற்கு முன்னதாக தட்டச்சு பயிற்சி நிறுவனத்தில் பயின்று வேகமாக தட்டச்சு அடிக்கும் திறமையை ஓவியா பெற்றார். பல பேச்சு போட்டிகளிலும் ஓவியா வெற்றி பெற்று பல பரிசுகளை அள்ளியது குறிப்பிடத்தக்கது.
சிபிஎஸ்சி பள்ளியில் சேருவதற்கு என்எல்சி நிர்வாகத்தை சேர்ந்த விஸ்வநாத் என்பவர் உதவி புரிந்துள்ளார். இங்கு படிக்கும்போது ஓவியா தனது லேப்டாப்பை பயன்படுத்தி படித்துவந்தார். ஆசிரியர் பாடம் நடத்தும்போது அதைக்கேட்டு தன்னுடைய லேப்டாப்பில் தட்டச்சு செய்துகொள்வார். பாடத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அவரது ஆசிரியர், நண்பர்கள் அவர்களுக்கு உதவி புரிந்துவந்தனர்.
கணினி தொழில்நுட்பத்தில் படிக்க தமிழுக்கான சாப்ட்வேர் சரிவர இல்லாததால் அவரது ஆசிரியர், தாய் கோகிலாவின் குரல்வழி ஒலியினை பதிவேற்றம் செய்து தமிழ் மொழியினை கற்பித்தனர். அதனைக் கேட்டு ஓவியா பாடத்தை புரிந்துகொள்வார்.
ஓவியாவுக்கு கணிதம் கடினமாக இருக்கவே முப்பரிமாண தொழில்நுட்பத்தின் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டது. இதற்கான வேலையை அவரது பெற்றோர் வீட்டிலேயே செய்து கற்பித்துவந்தனர். இந்நிலையில் கடந்த வருடம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் கணினி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேர்வு எழுதுவதற்கு சிபிஎஸ்இ நிர்வாகத்திடம் ஓவியாவின் பெற்றோர் கோரிக்கை அளித்தனர்.
அதனை ஏற்றுக்கொண்டு ஓவியா கணினியை பயன்படுத்தி தேர்வு எழுதலாம் என சிபிஎஸ்இ நிர்வாகம் ஒப்புதல் அளித்தது. அதன்படி ஓவியா கணினியில் தேர்வு எழுதி 500க்கு 447 மதிப்பெண்கள் பெற்று 89.4 விழுக்காடு தேர்ச்சி பெற்றார். இது தமிழ்நாட்டில் பார்வை குறைபாடுடைய மாணவர்கள் பிரிவில் எடுக்கப்பட்ட அதிகபட்ச மதிப்பெண் ஆகும். தற்போது ஓவியா பதினொன்றாம் வகுப்பில் காமர்ஸ் பிரிவை தேர்ந்தெடுத்து படித்துவருகிறார்.
எதிர்காலத்தில் மாவட்ட ஆட்சியர் ஆகி சமுதாயத்திற்கு சேவை செய்யவும், மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்விற்காக உதவி செய்வதாகவும் ஓவியா சாதித்த புன்முறுவலோடு தெரிவிக்கிறார். "பிரெய்லி முறையில் போதுமான நூல்கள் கிடைப்பதில்லை, அப்படி கிடைக்கும்போது அதிக எடை உடன் கூடிய புத்தகமாக இருக்கிறது. அதை வைத்து படிப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி படிக்கும்போது தேவையான அனைத்தும் கிடைக்கிறது. எனவே தன் பிள்ளையைப்போல் மற்ற மாணவர்களும் தொழிநுட்பத்தை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும்" என ஓவியாவின் தந்தை விஜயராஜ் பெருமிதம் பொங்க கூறுகிறார்.
இதையும் படிங்க... வாருங்கள் பாரம்பரியத்தை மீட்டெடுப்போம் - வரலாற்றை கலை வழியாக நினைவூட்டும் மாணவர்