கடலூர்: காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள வீராணம் ஏரி, சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரியாக விளங்குகின்றது. 47.5அடி கன அடி கொண்ட ஏரி வடகிழக்குப்பருவ மழைக்காரணமாக தனது முழுக் கொள்ளளவை எட்டியது.
இந்நிலையில் கடந்த இரு தினங்களாக கடலூர் மாவட்டம் மற்றும் சிதம்பரம் காட்டுமன்னார் கோயில், அரியலூர், பெரம்பலூர் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக செங்கால் ஓடை வழியாக ஏரிக்கு 5ஆயிரம் கன அடிக்கும் மேல் மழை நீர் வந்த வண்ணம் இருந்தது.
இதனால் நேற்று(நவ.12) ஏரியின் பாதுகாப்புக்கருதி வீராணம் புதிய மதகு மற்றும் வெள்ளியங்கால் ஓடை வழியாக பத்தாயிரம் கன அடிக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. வெள்ளியங்கால் ஓடை வழியாக வெளியேற்றப்பட்ட மழை நீரால் வீராணத்தைச் சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 2000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
இந்நிலையில் நேற்று முழுவதும் மழை ஓய்ந்த நிலையில் ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது. 350 கன அடி நீர் மட்டும் வருவதால் வெளியேற்றப்படும் நீரின் அளவை 1500 கன அடி ஆக பொதுப்பணித்துறை அதிகாரிகள் குறைத்தனர். இருப்பினும், அதிகாலையில் இருந்து காட்டுமன்னார்கோயில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்த வண்ணம் உள்ளது. இதனால் பொதுப்பணித்துறையினர் ஏரியை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சிதம்பரம் அருகில் வீடுகளை சூழ்ந்த மழைநீர்; பொதுமக்கள் அவதி