கடலூர்: என்எல்சி வேலைவாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நெய்வேலி ஆர்ச் கேட்டில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்.
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், "நெய்வேலி என்எல்சி பொறியாளர் தேர்வில் 259 காலிப் பணியிடத் தேர்வுக்கு ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்தத் தேர்வை என்எல்சி நிறுவனம் நடத்தாமல் பொதுத் துறை நிறுவனத்தால் நடத்தப்பட்டது.
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தால் படித்த பட்டதாரிகளுக்கு வேலை கொடுப்பேன் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால், தற்போது 259 பணியிடங்களுக்கு ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதிலிருந்து படித்த இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டம் எவ்வளவு உள்ளது என்று தெரிகிறது.
மோடி இந்தியாவில் ஓப்பன் கமெண்டேஷன் என்ற பெயரில் தேர்வு நடத்தி, அதில் மறைமுகமாக வடமாநிலத்தவர்களைக் குடிபெயரவைக்கிறார். என்எல்சியில் அலுவலர்கள் எல்லாம் இந்தி பேசுவராக இருக்கிறார்கள். தமிழர்கள் யாரும் இல்லை. அவர்களுக்கு தமிழும் தெரியாது, ஆங்கிலமும் தெரியாது.
என்எல்சி பொறியாளர் தேர்வில் 259 பேரில் 11 பேர் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தேர்வாகியுள்ளனர். இதில் மீதி உள்ளவர்கள் தமிழர்கள் அல்லாதவர்கள் தேர்வாகியுள்ளனர். இதனால் இந்தத் தேர்வை ரத்துசெய்து மறு தேர்வை நடத்த வேண்டும்.
மோடி இந்தியா விற்பனைக்கு என்று போர்டுதான் வைக்கவில்லை. எல்லா பொதுத்துறை நிறுவனங்கள் காலப்போக்கில் என்எல்சி நிறுவனத்தையும் தனியாருக்கு விற்பனை செய்துவிடுவார். மின் விநியோகத்தை தனியார் மையத்திற்கு ஒப்படைக்க உள்ளார். அவை அனைத்தையும் அதானி அம்பானிக்கு கொடுத்துவருகிறார்.
2021ஆம் ஆண்டு திமுக தலைமையிலான கூட்டணிதான் ஆட்சி அமைக்கப்போகிறது. பாஜக அரசு இரண்டாம் இடம்பிடித்து அதிமுகவை அடியோடு அழிப்பதற்குத் திட்டம் வகுத்துவருகிறது.
இட ஒதுக்கீட்டுக்காக பாட்டாளி மக்கள் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். மாவட்ட ஆட்சியருக்கும் இட ஒதுக்கீடுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? ராமதாஸ் இதுபோன்ற செயல்களால் சொந்த சாதியினரையே ஏமாற்றிவருகிறார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் எம்பிசி-க்கும், ஓபிசி-க்கும் மருத்துவக் கல்லூரியில் இட ஒதுக்கீடு கேட்கவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நான்தான் கேட்டேன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இடதுசாரி உடனும் அம்பேத்கர், பெரியார் சிந்தனை உடையவர்களுடன் கைக்கோத்துச் செல்கிறது" என்று கூறினார்.