கடலூர் மாவட்ட அனைத்து கிராமிய இசைக்கலைஞர்கள் நல சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது இசைகள் முழங்க கரகாட்டம், தவில், நையாண்டி மேளம் வாசித்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அதில், கரோனா தொற்று காலத்தில் கிராமிய இசைக்கலைஞர்கள் வறுமையில் வாடுவதால், ஊரடங்கு காலத்தில் மாதம் ரூபாய் 5000 வழங்க வேண்டும். நல சங்கத்தின் சார்பில் அரசு புதிதாக பதிந்த நல சங்கத்தினருக்கு ரூபாய் 2000 அறிவித்துள்ளது. அது அனைத்து இசைக் கலைஞர்களுக்கும் வழங்க வேண்டும்.
60 வயதைக் கடந்தவர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். வீட்டுமனைப்பட்டா வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இசைக் கலைஞர்களுக்கு தவில், நாதஸ்வரம், தாரை, தப்பட்டை, உடுக்கை, பம்பை ஆகியவை இலவசமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் சங்கத்தின் சார்பாக கோரிக்கை மனு அளித்தனர்.