இந்திய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், திமுக சார்பில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, அவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, கடலூரில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யபட்டதைக் கண்டித்தும், குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் திமுக நகரச் செயலாளர் ராஜா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில், மத்திய அரசுக்கு எதிராக திமுகவினர் கோஷமிட்டனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் சாந்தி, புதுநகர் காவல் ஆய்வாளர் உதயகுமார் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனிடையே, கடலூர் மஞ்சக்குப்பத்தில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த திமுக பேச்சாளர் வாஞ்சிநாதன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: குடியுரிமை மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் - உதயநிதி ஸ்டாலின் கைது